சனி, 26 ஏப்ரல், 2014

தமிழருவி மணியனுக்கு ஒரு மடல்

மதிப்பிற்குரிய தமிழருவியாருக்கு,
வணக்கம். நேற்றைய தினம் தந்தி தொலைக்காட்சியில் தங்கள் நேர்காணல் கண்டேன். உங்களின் உணர்ச்சி மிக்க பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது. தமிழகத்தின் மீதுள்ள தங்கள் நல்லெண்ணத்தைப் பாராட்டுகிறேன். மகாத்மாவின் கொள்கைகளுடன் பெருந்தலைவரின் வழிநின்று வாழ்ந்து வரும் தங்களைப் போற்றுதற்கு வார்த்தைகள் ஏதுமில்லை. தமிழகத்தில் பா.ஜ. கூட்டணி அமைக்க பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் முக்கிய பங்கு வகித்தவர் தாங்கள். நேற்றையதினம் தங்களைப் பேட்டி கண்ட திரு. பாண்டே அவர்களைப் போன்று இந்த நண்பனுக்கும் தங்களிடம் சில கேள்விகள் உண்டு.
1. என் வீடு பற்றி எரியும்போது புனித கங்கை நதியிலிருந்து நீர் கொண்டு வந்து அணைக்கவா முயல்வேன்? அருகிலுருப்பது சாக்கடையானினும் அதைக் கொண்டு என் வீட்டுத் தீயை அணைக்க முயல்வேன் என்று கூறினீர்கள். திரு. மோடி அவர்களைத் தாங்கள் சாக்கடைக்கு ஒப்பிட்டது சற்றே வருத்தத்தை அளித்த போதிலும், சாக்கடை என்று எண்ணி சில விஷ வாயுக்கள் நிறைந்த சாக்கடையைத் தெளித்து விட்ட உங்களை என்னவென்பது? கொள்கையென்று எதுவுமில்லாத, எப்போதும் குடிவெறியுடன் திரியும் விஜயகாந்தை பா.ஜ. கூட்டணிக்குக் கொண்டுவருவதற்கு ஏன் அத்தனை அரும்பாடு பட்டீர்கள்.? சாதி வெறி பிடித்த மிருகக் கட்சியான பா.ம.கவை இந்த கூட்டணியோடு சேர்த்துவிட ஏன் அத்தனை பாடுபட்டீர்கள்? வை.கோ மற்றும் பா.ஜ.வை மட்டுமே கொண்டு உங்களால் ஏன் ஒரு கூட்டணியை உருவாக்க முடியவில்லை? தங்களின் எண்ணம் இன்றைய காங்கிரஸ் ஆட்சியை அகற்றொழிக்க வேண்டுமென்ற ஒரே நோக்கத்திற்காக பா.ஜ.வை ஆதரித்தேன் என்று கூறும் தாங்கள், ஏன் பா.ஜ., ம.தி.மு.க, மற்றும் அ.இ.அ.தி.மு.க என்று தமிழக மக்களில் பெரும்பாலான கட்சி சாராத நடுநிலை மக்கள் விரும்பிய ஒரு கூட்டணியை உருவாக்குவதற்கு முயலவில்லை?

2. தே.மு.தி.க, பா.ம.க என்று வாக்குகள் சிதறிப்போன காரணத்தால், இந்த தேர்தலில் தி.மு.கவிற்கு சில இடங்களில் வெற்றி கிடைப்பதற்கு நீங்கள் மறைமுகமாகக் காரணமாகிவிட்டீர்கள் என்பதை ஒப்புக்கொள்கின்றீர்களா?

3. தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சிகளிடமிருந்து தமிழகத்தைக் காப்பாற்ற முயல்வதாகத் தாங்கள் குறிப்பிட்டீர்கள். ஆனால் தமிழக மக்கள் இன்னமும் அவர்களது மாயையிலிருந்து வெளிவராமல்தான் இருக்கின்றார்கள் என்பதைத் தாங்கள் அறிவீர்களா?

4. தனக்குரிய தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளின் வாக்குகளைப் பெற்றுவிட்ட பா.ம.க பிற தொகுதிகளில் தனது வாக்குவங்கியைக் கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுத் தராமல் தங்கள் விருப்பத்திற்கேற்ற வேட்பாளர்களுக்கு அளித்துவிட்டுத் தங்களை முட்டாளாக்கிய செயல்களைத் தாங்கள் அறிவீர்களா?

5. இந்த கூட்டணி அமைவதற்கு முக்கியக் காரணம் மரியாதைக்குரிய பொன். இராதா கிருஷ்ணனின் பொறுமையே என்று குறிப்பீட்டீர்கள். அளவுக்கு அதிகமான பொறுமை ஆபத்துக்களில் தள்ளி விடும். இன்றைக்குத் தமிழகத்தில் கூடாத ஒரு கூட்டணிக்குள் பா.ஜ.வை அவரைத் தள்ளியிருக்கின்றது.  தே.மு.தி.கவின் தலைவர் அத்தனை அலைக்களித்த போதிலும், அவருக்குக் கூடுதலான இடங்களை வைத்திருந்து அளித்தது, தன் தலையிலே மிளகாய் அரைக்க அவருக்கு இடம் கொடுத்ததைப் போன்று தோன்றுகிறது எனக்கு. உங்கள் கருத்து என்ன?

தமிழகத்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்னும் தங்களின் எண்ணத்தை மதிக்கிறேன். பாராட்டுகிறேன். ஆனால் மறைமுகமாக தி.மு.க பெறும் சில வெற்றிகளுக்குத் தாங்கள் உதவியிருக்கின்றீர்கள் என்பது மறுக்க இயலாத உண்மையாகும்.

இன்றைக்கு அரசியல் கட்சி ஆரம்பித்து இருக்கும் நீங்கள் எதிர்காலத்தில் எப்படிச் செயல்படுவீர்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

நன்றி

இப்படிக்கு
நல்ல நண்பன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக