சனி, 17 டிசம்பர், 2016

வெற்றித் தேவதையைப் போல் வேண்டும் புதியதோர் தலைமை....



அன்புத் தோழர்களே..
மிகுந்த கனத்த மனத்துடன் இதைப் பதிவிடுகின்றேன். தமிழகத்தின் தன்னிகரற்ற தலைவியாக விளங்கிய, உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களால் அம்மா என்று அழைக்கப்பெற்ற,
செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்களின் மரணம் ஏற்படுத்திய அதிர்ச்சி அலைகள் அடங்குவதற்குள், அம்மரணம் குறித்த வதந்திகள் மற்றும் பல்வேறு கருத்துப் பரிமாற்றங்கள் தமிழத்தைப் படாதபாடு படுத்தி வருகின்றன.
     இப்பதிவு அம்மாவின் மரணம் குறித்தது அல்ல. அதைத் தொடர்ந்து பரவி வரும் வதந்திகள் பற்றியதும் அல்ல. மாறாக இன்றைய சூழ்நிலையில் தமிழகம் எப்படிப்பட்ட இன்னலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளது என்பதைக் குறித்தும், அதிலிருந்து மீள்வதற்காக நாம் யோசிக்க வேண்டிய விஷயங்களைக் குறித்துமானது.
     இராணுவம் போன்ற கட்டுப்பாட்டுடன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை நடத்தி வந்த புரட்சித் தலைவி அம்மா அவர்களின் மறைவிற்குப் பின்னர், தமிழகத்தின் அரியணை காலியாகவே உள்ளதென்று கருதலாம். பொறுப்பேற்றுள்ள முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அவர்களிடம் நாம் அம்மாவிடம் எதிர்பார்த்த அதிரடி முடிவுகளையும், தமிழகத்தின் நலனுக்காக என்றுமே மாறாத நிலைப்பாடுகளையும் எதிர்பார்க்கவே இயலாது. உதாரணமாக, அம்மா அவர்கள் முழுமூச்சுடன் எதிர்த்து வந்த மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், அம்மா மருத்துவமனையில் இருந்த போதும், அவர் இறந்த பின்னரும் தமிழக அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
     இந்நிலையில் சின்னம்மா என்று இவர்கள் பொங்குவதும் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுவதும் மிகுந்த வேதனையைத் தருகின்றன. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், கழகத்தின் அமைப்புச் செயலாளர்கள் தவிர தொண்டர்கள் யாரேனும் இவரைத் தலையில் வைத்துக் கொண்டு ஆடுகின்றார்களா என்று பார்த்தால், இல்லையென்றே தோன்றுகிறது.
புரட்சித் தலைவரால் உருவாக்கப்பட்டு, புரட்சித் தலைவியால் மெருகூட்டப்பட்டு மென்மேலும் உயர்ந்த ஓர் இயக்கம், தன் வழிப்பாதையில் இருந்து மாறிச்செல்கின்றதோ என்ற ஐயத்தைத் தற்போதைய தமிழக அரசியல் களம் ஏற்படுத்துகின்றது. இயக்கத்தின் பொதுச்செயலாளராக யார் வரவேண்டும் என்பதற்கான விதிமுறைகளையும் புரட்சித் தலைவர் வகுத்துச் சென்றிருக்கின்றார். இந்நிலையில் காணொளி, பத்திரிக்கை ஊடகங்கள் வாயிலாக, யார் யாரெல்லாமோ அம்மாவிற்குப் பின் சின்னம்மா என்று பதைபதைப்பது எதற்காகவோ...? இயக்கத்தின் விதிமுறைகளின்படி தேர்தலை நடத்தி, அதன்மூலமாக பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டியதை விடுத்து, இவ்வாறு கூவுவது எதற்காக?
அம்மா அவர்கள் மறைந்தபோது, தமிழகத்தில் பா.ஜ.க வேரூன்றி தழைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் தோன்றியது. ஆனால் ஆழ்ந்து நோக்கினால் அவ்வெண்ணம் தவறானதாகவே படுகின்றது. தேசிய அளவில் வளர்ந்து வரும் பா.ஜ.க மற்றும் பிரதமர் மோடி அவர்களின் செயல்பாடுகளில் யாதொரு குறைகள் இல்லாதபோதிலும், தமிழகத்தின் நலன் சார்ந்த முடிவுகளை எந்த ஒரு தேசிய கட்சியாலும் எடுக்க இயலாது. அதற்கு மாநில நலன் நாடும், பிராந்திய மக்களின் மனதாக செயல்படும் ஒரு அரசே தேவை.. அதை காங்கிரசாலோ அல்லது பா.ஜ.கவாலோ எந்த ஒரு நிலையிலும் கொடுக்க இயலாது. உதாரணம் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் அவர்களின் நிலைப்பாடு.
மேலும், ஒரு தேசிய கட்சியின் தலைமைக்குக் கட்டுப்பட்டு நடக்கக்கூடிய முதல்வரால் மாநில நலன் சார்ந்த முடிவுகளை எடுக்க இயலாது. எந்த ஒரு முடிவை எடுக்க வேண்டுமானாலும் தேசிய தலைமையின் கையே மேலோங்கி இருக்கும். தேசிய தலைமையின் முடிவுகளை எதிர்த்தால் பதவி பறிபோகும். அதற்காகவே காத்திருக்கும் மற்றொரு நபர் பதவியேற்பார். அத்தகையதொரு தலைமை நமக்குத் தேவையா?
இந்நிலையில், தமிழகம் தனக்கான ஒரு அரசியல் தலைமையை உருவாக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. அம்மா அவர்களின் மறைவிற்குப் பின்னால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை ஒரு சீரிய தலைமையால் மட்டுமே ஈடுகட்ட இயலும். ஆனால் அதை ஈடுகட்டுமளவுக்கான தகுதிகளைக் கொண்ட அரசியல் தலைவர்கள் தமிழகத்தில் இல்லை என்பதே வேதனைக்குரிய செய்தி.
நாம் தேர்ந்தெடுக்க வேண்டிய தலைமை அடிவருடிகளாலும், துதிபாடிகளாலும் சூழப்பட்டவையாக இருத்தல் கூடாது. அம்மாவின் தோழி அல்லது அம்மாவின் அண்ணன் மகள் என்ற ஒரே தகுதியை மட்டுமே கொண்டிருத்தல் கூடாது. இன்பதுன்பங்களில் மக்களின் நிலை அறிந்து, தமிழகத்தின் நன்னலன் சார்ந்த முடிவுகளை மட்டுமே எடுக்கக் கூடிய தலைமையாக இருத்தல் வேண்டும்.
அத்தகையதொரு தலைமைப் பண்பைக் கொண்டிருப்போர் யார்? நானும் தேடுகின்றேன் நண்பர்களே... தீய சக்திகளுக்கும், மாநில நலன் சாராத தேசிய சக்திகளுக்கும் நமது மாநிலத்தை விட்டுக் கொடுத்திடல் வேண்டாம். நமது தலைமை நம்மிடமிருந்தே உருவாகுதல் வேண்டும். புரட்சித் தலைவரின் மறைவுக்குப் பின்னர் எவ்வாறு புரட்சித் தலைவி தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்தாரோ அதைப் போல், இன்னுமொரு சக்தி தானாக உருவெடுக்க வேண்டும். அதுவே நமக்குரிய தலைமையாக இருத்தல் வேண்டும்.
தேடுவோம் நமது தலைமையை....
நமது தேவை வெற்றித் தேவதைப் போன்றதொரு தலைமை
 
அன்புடன்
நல்ல நண்பன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக